ரஜினிக்கு உதயநிதி பதில்

‘சினிமா வேறு, அரசியல் வேறு’ என்ற பதத்தைப் பல்வேறு பிரபலங்கள் சொல்லியிருக்கின்றனர். முக்கியமாக தமிழகத்தில் அது அதிக முறை ஒலித்திருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் அந்த வார்த்தைகள் ஒரு காமெடி வசனம் போலவே இருந்து வருகிறது. காரணம், தமிழக அரசியலையும், தமிழ் சினிமாவையும் தனித்தனியாகப் பிரித்து தமிழக வரலாற்றை எழுதிவிட முடியாது.

சமீப காலமாக ரஜினி பேசும் அரசியல் கருத்துகள் சர்ச்சைகளை உண்டாக்கிக்கொண்டிருக்க, ரஜினியின் பேச்சுக்குப் பிறகு உதயநிதி பதிவு செய்யும் ட்வீட்கள் அந்த சர்ச்சைகளை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றன.

 உதயநிதியின் ட்வீட்களில் ரஜினியைத் தான் குறிப்பிடுகிறார் என ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரிடம் சண்டைக்குப் போகாத குறையாகப் பேசி வருகின்றனர்.
 இவற்றுக்கெல்லாம் இதுவரையில் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்த உதயநிதி முதன்முறையாகப் பேசியிருக்கிறார்.

உதயநிதியின் சைக்கோ திரைப்படத்துக்கு புரமோஷன் செய்யும் பணிகளில் அவர் இப்போது ஈடுபட்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக அவர் கொடுத்த பேட்டியில் ரஜினியை ட்விட்டரில் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதில் சொன்ன உதயநிதி “நான் ரஜினியை வைத்துதான் ட்வீட் பதிவு செய்கிறேன் என எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் இப்போது வரையிலும் அரசியலுக்கு வரவில்லை. அவர், அரசியலுக்கு வரட்டும். அதன் பிறகு நான் இந்த கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.