சிம்புவுடன் இணையும் வடிவேல்

சிம்பு – மிஷ்கின் இணையும் புதிய படத்தில் தற்போது புதிய வரவாக வடிவேலுவும் இணைந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இதனிடையில் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக, சிம்பு உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். பல வருடங்களாகவே மிஷ்கின் – சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இம்முறை அது நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த சுவாரஸ்யமான கூட்டணியில் மற்றுமொரு ஆச்சரியமாக இணைந்துள்ளார் வடிவேலு. இப்படத்தின் ஒரு பகுதியாக வடிவேலுவும் இருப்பார் என்று முன்னரே ஊகிக்கப்பட்டாலும், இதுவரை அவரது வேடம் குறித்து முக்கியமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது கிடைத்துள்ள தகவல்படி, மிஷ்கினின் வழக்கமான ‘டச்’ உடன், ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு ஒரு சந்தேகத்திற்குரிய மனிதனாக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிம்பு – வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இக்காட்சிகளை மிஷ்கின் கூடுதல் சுவாரஸ்யத்தோடு மெருகேற்றிவருகிறார் என்று கூறப்படுகிறது.

சிம்பு சமீபத்தில் திரிஷாவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் காணப்பட்டார். கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக அறியப்படும் இந்த குறும்படம், லாக்டவுன் காலத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் ஒன்றாகும். இதற்கு முன்பு ஹரி இயக்கிய கோவில் படத்தில் வடிவேலு சிம்புவுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.