விஜய் ரஜினி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் பாஜக நெருக்கடி

ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அதற்கு முன்பு பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மேற்பார்வையாளராக ரஜினியோடு கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருக்கும் தமிழருவி மணியனை நியமித்திருக்கிறார்.அர்ஜுன மூர்த்தி ஒரு முழு தீவிர வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர் என்பது அவரது சமூகதளங்களில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி பாஜகவுடன் ஒரு டீலிங் வைத்து அதன் அடிப்படையிலேயே கட்சி தொடங்குகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை வலுப்படுத்துவது போல அர்ஜுன மூர்த்தி போன்றவர்களுக்கு மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 40 வருடங்களாக ரஜினி மன்றத்தில் பணியாற்றும் ஒருவருக்குக்கூட ஒருங்கிணைப்பாளராகத் தகுதி இல்லையா என்று சீமான் கேள்வி எழுப்பியதும் இதன் அடிப்படையில்தான்.இந்த நிலையில் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக ரஜினிக்காக பாஜக சில வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. ரஜினியின் அரசியல் வருகை பற்றி விசாரித்துக் கொண்டிருந்த அமித் ஷா, சென்னை வந்து சென்ற சில நாட்களில் ரஜினி தனது அரசியல் வருகை அறிவிப்பை வெளியிட்டார். பல மாநிலங்களில் அம்மாநில பாஜக தலைமைகளுக்குத் தெரியாமலேயே டெல்லியில் இருந்து தனது நேரடிக் கரங்கள் மூலம் சில அஜெண்டாக்களை செயல்படுத்தி வருகிறார் அமித் ஷா. அப்படித்தான் தமிழகத்திலும் ரஜினிக்காக டெல்லியில் இருந்து அமித் ஷாவின் கரம் நீண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்குப் புதிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அண்மையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். ஆனால், அந்தக் கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என விஜய் மறுத்தார். தன் தந்தையோடு கட்சி ரீதியாகத் தன் ரசிகர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டார். பதிலுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர், ’ விஜய்யைச் சுற்றி இப்போது ஒரு ஆபத்து சூழ்ந்திருக்கிறது. அதிலிருந்து அவரை தப்பவைக்க நான் முயற்சி செய்கிறேன்’ என்று கூறினார். ஆனால் அந்த ஆபத்து என்ன என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்த சர்ச்சை சில நாட்களிலேயே முடிவுக்கு வந்து, தான் ஆரம்பித்த காட்சியை தானே கலைத்துவிட்டார் சந்திரசேகர்.

இந்தப் பின்னணியில் விஜய்க்கு இப்போது பாஜக சார்பில் ஒரு புதிய நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதுதனிக்கட்சி ஆரம்பித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ரஜினிக்கு ஆதரவாக விஜய் செயல்பட வேண்டும். விஜய்யின் மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் வலுவாக இருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் ரஜினிக்கான களப்பணிகளை விஜய் செய்ய வேண்டும். ரஜினிக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரமும் செய்ய வேண்டும். இதற்கு விஜய் மறுத்தால், விஜய்க்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகள் அமலாக்கப் பிரிவின் விசாரணையின் கீழ் கொண்டு வரப்படும் என்பதுதான் விஜய்க்கு அனுப்பப்பட்டிருக்கும் மெசேஜ்.ஏற்கனவே மாஸ்டர் படப்பிடிப்பின்போது வருமானவரித் துறை விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அங்கிருந்தே விசாரணைக்காக வருமானவரி அதிகாரிகள் சென்னை வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். அப்போது விசாரணையை முடித்துக்கொண்டு மீண்டும் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எந்தவித அழைப்பும் இன்றி திரண்டனர். அப்போது ஒரு வாகனத்தின் மீது ஏறி, அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி தான் பிரதமர் மோடியின் ட்விட்டுகளை விட அதிக ரீ ட்விட்டுகளைப் பெற்ற பதிவாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வளவு செல்வாக்குமிக்க விஜய்யை ரஜினிக்கு ஆதரவாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறது பாஜக. இந்த நெருக்கடிக்கு விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதில்தான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கின்றன என்கிறது அரசியல் வட்டாரம்