யோகிபாபு நடிக்கும் டபுள் ரோல்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் சிலருடைய பெயர்களை நிரந்தரமாகச் சேர்க்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. வேறு இடம் இல்லாமல், ஒரே ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட படங்கள், ஒரே ஆர்கெஸ்ட்ராவினால் நிகழ்த்தப்பட்ட இசைக் கோவைகள் எனச் சிலவற்றை உதாரணம் சொல்லலாம். அந்த வரிசையில், தற்போதைய தமிழ் சினிமாவின் நிரந்தரப் பெயராக இருப்பது ‘யோகி பாபு’.

சென்ற வருடத்தில் மட்டும் 30 திரைப்படங்களில் நடித்து, வருடம் முழுவதுமே மக்களிடம் தனது முகத்தைக் காட்டி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு வெளியான 10 சதவிகிதப் படங்களில் யோகி பாபு நடித்திருக்கிறார். இதற்குக் காரணம் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு.

யோகி பாபு எல்லா படங்களிலும் இருக்கிறார்; அதனால் மக்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது என்ற ஒரு பேச்சும் தமிழ் சினிமாவில் இருந்தது. அதையும் தர்ம பிரபு என்ற திரைப்படத்தில் முழுவதுமாக வரும் ஹீரோ கேரக்டரில் நடித்து பொய்யாக்கினார்.
இப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் யோகி பாபுவை, சிங்கிளாக இல்லாமல் டபுளாகப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தாரோ என்னவோ… இயக்குநர் கிரிஷ் இயக்கும் டக்கர் திரைப்படத்தில் டபுள் ரோலில் வந்து அசத்தப்போகிறார் யோகி பாபு.
நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் “டக்கர்” திரைப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் யோகிபாபு. “அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்.

அதே நேரம், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா, மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும்” என்கிறார் இயக்குநர் கிரிஷ்.

சித்தார்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். வெவ்வேறு வாழ்வியல் மனநிலை கொண்ட இருவர் சந்திக்கும்போது, அவர்களது அளவுக்கதிகமான ஈகோ மனநிலையால் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதைதான் “டக்கர்”. ஃபேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் ஜி.ஏ படத்தொகுப்பு செய்கிறார்.