கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ திரைப்பட கெட்அப்பில் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ளது. வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம், வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம், பெரும் பாராட்டுகளைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. அதே போன்று இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது.
திரைப்படங்களில் பல வருடங்களாக ஊமையாக்கி வைக்கப்பட்டிருந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை இந்த இரு படைப்புகளும் ஓங்கி ஒலிக்கச் செய்தது. அத்துடன் தமிழ் சினிமா வரலாற்றில் தங்களுக்கென முக்கிய இடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.
இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு – மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் தனுஷின் கதாபாத்திரமும் கெட்அப்பும் எவ்வாறு அமையும் என்னும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் லால் படப்பிடிப்புத்தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இருவரும் லுங்கி அணிந்து நிற்கும் அந்த புகைப்படத்தின் கீழே ‘எமனும் கர்ணனும்’ என்ற வாசகத்தையும் அவர் இணைத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.