தனது மனைவி தனது திருமண நாளில் திடீரென மரணிக்க, கடவுள் மீது அதிருப்தி அடைகிறார். அப்போது அவருக்கு மனைவியின் மறைவு குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வர, அவர் எப்படி சாய்பாபாவை போற்றுகிறார் என்பது இரண்டாவது கதை.
நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்துக்கு டான்ஸ் நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டு, அவரால் டான்ஸ் ஆட முடியாத நிலை. அவர் தந்தை தலைவாசல் விஜய் கடவுளை திட்ட, அபிராமி புட்டபர்த்தி நோக்கி பிரார்த்தனை செய்ய என்ன நடக்கிறது என்பது அடுத்த கதை.
தனது ஒரே மகன் காசியில் கங்கை நதியில் முழ்கி மரண படுக்கையில் போராட, டாக்டர்கள் கை விரித்த நிலையில் பாபாவை சரணாகதி அடையும் பாசமுள்ள தாய் சுகாசினி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது இன்னொரு கதை.
அமெரிக்காவில் வசிக்கும் சாய்பாபா பக்தர்களான இரண்டு வெள்ளைக்காரர்கள் வீட்டை சுற்றி காட்டு தீ சூழும் நிலையல், பாபா அருளாள் அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்பது கடைசி கதை. தன்னை நம்பும், பக்தியுடன் அழைக்கும் ஒரு சிறுமிக்குசாய்பாபா காட்சி கொடுத்தாரா என்பதுடன் படம் முடிகிறது.
தொழில் அதிபராக கடவுள் பக்தியால் மனம் மாறி நல்லது செய்பராக ஜெகபதி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவியை இழந்த சோகத்தில் தவிப்பராக, முதலில் கடவுளை தூற்றி விட்டு பின்னர் நடந்ததை கேள்விப்பட்டு பகவான் பக்தராக மாறுபவராக ஓய்.ஜி. மகேந்திரன் பக்தி பழமாக நடித்திருக்கிறார்.
உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற தவிப்பராக, கடவுளுடன் சரணாகதி அடைந்து அவரை நம்பும் பக்தர்களின் பிரதிநிதியாக சுகாசினி வருகிறார். படத்துக்கு அவரின் நடிப்பு , அவரின் டயலாக் ரொம்பவே பலம். காலில் அடிபட்டதால் டான்ஸ் ஆட முடியாமல் தவிப்பராக உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார் அபிராமி. இவர்களை தவிர அமெரிக்காவில் வசிப்பவரும் பாபாவின் அருளை எப்படி பெறுகிறார்கள் என்ற கேரக்டரில் இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் எளிமையான, உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
காசி, புட்டபர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய். தேவாவின் பின்னணி இசை ஆங்காங்கே வரும் இறை பாடல், படத்தை இன்னும் அழகாக்கி இருக்கிறது.
படத்தின் முக்கியமான சில இடங்களில் ஸ்ரீசத்யசாய்பாபாவின் நிஜ வீடியோ காட்சிக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதில் பல்வேறு காலகட்டங்களில் பாபாவின் தோற்றத்தை பார்ப்பதும் சாய்பாபா பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்ககூடும்.
முழுக்க முழுக்க ஆன்மிக படமாக அல்லாமல் பக்தர்களுக்கும், பாபாவுக்கும் இடையான உறவை, பாசத்தை நம்பிக்கையை சொல்லும் ஒரு தன்னம்பிக்கை படமாகவும், பாபாவை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள், எந்த இக்கட்டான காலகட்டத்திலும் சோதனையிலும் அவரை அழைத்தால், அவரை கைகூப்பி வணங்கினால் கண்டிப்பாக ஓடி வந்து உதவுவார், ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களை கரைப்பார் என்கிறது அனந்தா.
பாபா பக்தர்களை பரவசமடைய செய்யும் – அனந்தா