அன்பே டயானா முன்னோட்டம் வெளியானது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள படம் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது
முன்னதாக  வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது முன்னோட்ட வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட முன்னோட்டம், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.