விஜய்க்கு ஆதரவாக பாரதிய ஜனதா

விஜய்க்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.வருமான வரி சோதனைக்குப் பின்னர் நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். தகவலறிந்த பாஜகவினர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் 2ஆவது வாயிலை முற்றுகையிட்டு விஜய்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், என்.எல்.சியில் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதியளித்தீர்கள் என நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பினர்.

அதே சமயம் அங்கு வருகை தந்த விஜய் ரசிகர்கள் மற்றும் விசிகவினர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

படப்பிடிப்பு நடைபெறும்போது பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் செல்வமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோலவே அண்மையில் பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம் தேவையற்றது. விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல. இந்தமாதிரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்.அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு” என்று பேரரசு தெரிவித்துள்ளார்.

அதுபோலவே பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், போராட்டம் தொடர்பான செய்தியை பகிர்ந்து, “இந்த போராட்டம் தவறானது. Income tax நடைமுறை வழக்கமானது. அதை ஆதரித்து கட்சி ரீதியான போராட்டம் நம் மதிப்பை குறைக்கும்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று (பிப்ரவரி 8) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், “விஜய் என்பதற்காக நெய்வேலியில் பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை. நெய்வேலி சுரங்கம் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி.

இதற்கு முன்பு படப்பிடிப்பு நடந்தபோது விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நடத்துவதை அங்கு தடை செய்து வைத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதியில் படப்பிடிப்பு நடத்த ஏன் அனுமதித்தீர்கள் என்பதற்காகத்தான் நெய்வேலி பகுதியிலுள்ள தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

என்எல்சியிடம் அனுமதி பெற்றுதானே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “என்.எல்.சியாக இருந்தாலும் அனுமதி கொடுத்தது தவறு என்பதற்காகவே போராட்டம் நடந்துள்ளது. விஜய்க்கு மட்டுமல்ல, யாருக்கு அனுமதி கொடுத்திருந்தாலும் அது தவறுதான்” என்று தெரிவித்தார்.

மேலும், “நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை. மோடி அரசில் உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.