பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரஜினி நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த தர்பார் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கான ஓபனிங் ரஜினிகாந்தின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இல்லை என்பது தெரிகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 70 சதவீத திரைகளில் தர்பார் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அதற்கேற்ற வசூலைச் செய்ய தர்பார் திரைப்படத்தால் முடியவில்லை.
சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வெளியாகியிருக்கும் தர்பார் படத்தை வெகுஜன தளத்தில் வீரியத்துடன் கொண்டு சேர்க்கும் ஆக்கபூர்வமான முயற்சியை லைகா செய்யவில்லை என்கின்றனர்.
சென்னை நகரம் தொடங்கி கன்னியாகுமரி வரை படம் வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முதல் நாள் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை 500 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்து கல்லா கட்டினார்கள்.
வழக்கம்போல் அலுவலக நாள் என்பதால் வசூல் குறைவாக இருக்கிறது, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.