தீபிகா படுகோனேவிடம் தீவிர விசாரணை செல்போன் பறிப்பு

பாலிவுட் திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, தீபிகாவின் செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்புவதற்காகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து, பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் இருப்பது தெரியவந்தது. சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்த விவகாரம் குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரியா, அவரது சகோதரர் சோவிக் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகைகள் ரகுல்

ப்ரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷரதா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
இதில் போதைப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கு என்று பாலிவுட் வட்டாரத்தில் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு அதன் அட்மின்களில் ஒருவராக தீபிகா படுகோனே இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று முன் தினம் ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.இவரைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோர் நேற்று மும்பை கோலாபா பகுதியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். காலை 9.50 மணி முதல் பகல் 3.50 மணி வரை 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு பின்னர் முதலில் கரிஷ்மா பிரகாஷ் வெளியே வந்ததாகவும் அவரைத் தொடர்ந்து தீபிகா வெளியே வந்ததாகவும் இருவரும் தனித்தனியாக காரில் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.தடயவியல் பரிசோதனைக்காக விசாரணையின்போது தீபிகாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று, விசாரணைக்கு ஆஜரான சாரதா கபூர், சாரா அலி கான், கரிஷ்மா பிரகாஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 7 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அழிக்கப்பட்ட டேட்டாக்களை ரெக்கவரி செய்து விசாரணை மேற்கொள்ளப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நடிகரும் தீபிகாவின் கணவருமான ரன்வீர் சிங்கிடமும் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இதற்குப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.