‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை படமாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் கேரக்டரில் நித்யா மேனன் நடிப்பது முதல், உண்மையான வாழ்க்கை கதையாக்கப்படுகிறதா என்பது வரை பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்து வந்த இந்தப் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி இப்போது விளக்கமளித்துள்ளார்.
தி அயர்ன் லேடி திரைப்படம் குறித்த பிரச்சினைகளில் முக்கியமானது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில் எந்தப் பாகத்தை திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள் என்பதுதான்.
‘தி அயர்ன் லேடி’ திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ‘அம்மா’ செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது” என்று கூறியிருப்பதன் மூலம், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முழுவதையும் கேமராவுக்குள் பிடித்து திரையில் காட்டப்போகிறார் என்பது தெரிந்துள்ளது.
நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டது குறித்து விளக்கும்போது, “உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களைக் கவனமாகப் பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான கலைஞர் எனத் தேர்வு செய்தேன்.
அம்மா அவர்களைப் போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமைத் திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களைப் போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர். சிறு வயது முதலே ‘பரதநாட்டியம்’ மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2021 தேர்தலுக்குள் இந்தத் திரைப்படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்றும், கிட்டத்தட்ட ஒரு தேர்தல் பிரச்சாரத்தைப் போல இந்தப் படம் வெளியிடப்படவேண்டும் என்றும் இயக்குநருக்குப் பல திசைகளிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் ‘காந்தி’ வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிகச் சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது. இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
தி அயர்ன் லேடி திரைப்படத்தின் தகவல்களை இத்தனை ரகசியமாக வைத்திருக்கவேண்டியது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் கீழ்கண்டவாறு ஒரு கடிதத்தைத் தனது நன்மையைக் கருத்தில் கொண்டுள்ள பத்திரிகை, ஊடகம் மற்றும் அனைத்து இந்திய சினிமா ஆர்வலர்களுக்கும் எழுதியிருக்கிறார் பிரியதர்ஷினி.
இந்த களத்தில் 50 சதவிகித வெற்றி சரியான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் ‘உண்மை நிலையிலிருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்.’ படத்தில் உள்ள மூன்று முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஏற்ற நேரத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன். இதனை அறியும்போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.