கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது.இந்நிலையில் இப்படம் வெளியாகும் சமயத்திலேயே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு 2019 மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர்பங்கேற்றனர்.
கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு,ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பெங்களூரில் தொடங்கியுள்ளது.இன்றைய படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.கொரோனாவுக்குப் பின்பு தமிழகம் தவிர பிறமாநிலங்களில் திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது.
தென்னிந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் பெரிய நடிகரான யஷ் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.