கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது மனித இனத்தின் பெரும்பான்மையான பகுதி. இதுவரை எழுதப்பட்ட வரலாற்றிலேயே, மனிதன் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாலே ஒரு பேரழிவைத் தடுத்துவிட முடியும் என்ற நிலையை கொரோனா உருவாக்கியிருக்கிறது. உதவி செய்வதற்காக வெளியில் வந்தால்கூட, அது கொரோனா பரவலுக்கு உதவக்கூடிய சூழலில், தங்களது உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி மக்களின் உயிரைக் காத்து வருகின்றனர் மருத்துவத் துறையினர். அப்படிப்பட்ட மருத்துவத் துறையினருக்கு உலக சுகாதார தினத்தில் (ஏப்ரல் 7) நன்றியைக் கூறி, கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் செய்யவேண்டிய ஒன்றை நினைவுகூர்ந்திருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மகேஷ் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இரண்டு வார லாக் டவுணை நாம் முழு பலத்துடன் கடந்திருக்கிறோம். அரசுகளின் முயற்சிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களைக் கண்டு பெருமையடைவதுடன் அவர்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சமூகத்திலிருந்து தனித்திருப்பது மற்றும் ஆரோக்கியத்துடன் இருப்பதைத் தாண்டி நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. அது இந்தச் சூழலைப் பயன்படுத்தி நம்மிடையே பயத்தையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கும் மனிதர்களிடமிருந்து முக்கியமாகத் தள்ளியிருக்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் போலி செய்திதான் மிகப்பெரிய பிரச்சினை.