இந்தியாவில் அதிக மொழிகளில் படத்தொகுப்புப் பணியாற்றிய ஒரே நபர் என்னும் சாதனையை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படைத்துள்ளார். இந்தத் தகவலை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவின் திறமைமிக்க கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுபவர் ஸ்ரீகர் பிரசாத். சிறந்த படத்தொகுப்பாளராக பல அங்கீகாரங்களைப் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமீஸ், ஒடியா, வங்க மொழி, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, சிங்களம், கர்பி, மிஷ்ஷிங், போடோ மற்றும் பங்சென்பா என பதினேழு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த சாதனைக்கு அங்கீகாரமாக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீகர் பிரசாத் இதுவரை 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் கடல், செக்கச் சிவந்த வானம், துப்பாக்கி, புலி, சர்க்கார் என பலபடங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ள இவர் மாதவன் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார். ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படத்திலும் படத்தொகுப்பு செய்துள்ளார்.
தற்போது கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சார்யா போன்ற திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். லிம்கா புத்தகத்தில் இடம்பெற்ற அவருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.