தனுஷ் படத்துக்கு எதிர்ப்பு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் தலைப்பை மாற்ற சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பை வெளியிட்ட அவர் “கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்லர்… வெற்றியையும் தருபவர்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே கர்ணன் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்

1964ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே தலைப்பு தனுஷ் படத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில், ‘தங்கள் தயாரிப்பில் ‘கர்ணன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது.
நடிகர் திலகத்தின் மகாபாரதக் ‘கர்ணன்’ திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம்.

பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பெயரில் திரைப்படங்கள் எடுக்க முற்பட்ட போதும் இதே போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவை திருவிளையாடல் ஆரம்பம் என்றும் நவீன சரஸ்வதி சபதம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கெனவே வந்த திரைப்படங்களின் பெயர்களைப் புதிய படங்களுக்கு சமீபகாலமாகச் சூட்டிவருகின்றனர். இவ்வாறு பெயர் வைக்கும்போது, இணையதளத்தில் குறிப்பிட்ட பெயரைத் தேடினால் புதிய படங்கள் குறித்த தகவல்களே வருகின்றன. இது முன்னால் வந்த படங்களின் புகழை மங்கச் செய்வதாக அமைந்துள்ளது.