அரசியல் பேசும் ராட்சசி ஜோதிகா

அரசுப் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்த ராட்சசி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர்களே வகுப்புகளுக்கு சரியாக வராமல் மாணவர்களை மட்டும் எப்படி நீட் தேர்வு எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் Sy.கெளதம் ராஜ் இயக்கியிருக்கும் படம் ராட்சசி. இப்படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய ஜோதிகா, “அரசு பள்ளிகள் எப்படி இயங்க வேண்டும் என்று இதற்கு முன்பே பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை அணுகுமுறை புதிதாக உள்ளது. இதில் மகள், அப்பாவுக்கான காதல் கதை உள்ளது. அதுவும் புதிதாக இருக்கும். திருமணத்துக்கு முன்பே இந்தப் படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் எப்படி முதிர்ச்சியுடன் சிந்திக்கிறார் என்று தெரியவில்லை.

இப்போது வரும் புதிய இயக்குநர்கள் மிகத் தெளிவாக கதை கூறுகிறார்கள். தங்களுடைய படத்தின் வாயிலாக என்ன மெசேஜ் சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளின் இமேஜ், மார்கெட் நிலவரம் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கதை பண்ணுகிறார்கள்.

ராட்சசி படத்தின் எடிட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். ஒருவர் வசனம் பேசும் போது, எதிரில் இருப்பவரின் ரியாக்ஷ்ன் தான் பிரேமில் இருக்கும். படத்தின் டீசரைப் பார்த்து லேடி சமுத்திரகனி, இன்னொரு சாட்டை, பள்ளிக்கூடம் என்று கூறியுள்ளார். நான் ட்விட்டரில் இல்லை. எனது கணவரின் போனில் தான் பார்த்தேன். இன்னொரு படத்திலும் இதுபோன்ற சமூகக் கருத்துகள் வந்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்றைய தேவை.”

அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். 35 % மாணவர்களிடம் பேசும் போது, அவர்களது வகுப்புகளில் ஒரு மாதமாக, ஏன் ஒரு வருடம் முழுக்க ஆசிரியர்களே இருப்பதில்லை என்பது தெரிகிறது.

எனவே அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகளில் இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு சிஸ்டத்தை கொடுத்துவிட்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பிரச்னைகளைப் பேசும் கதைகள் 100 படங்களில் வந்தாலும் நாம் பார்க்க வேண்டும்.

எனது 2-வது திரைப்பயணத்தில் நல்ல கதைகள் வருகின்றன. பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஆண்களை என்னுடைய இந்த 2-வது பயணத்தில் தான் அதிகம் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.