கமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா

தேசிய ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது முடிவாகவில்லை. மார்ச் 18 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

ஊரடங்குமுடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேபோன்று புதிய திரைப்படங்கள் திரையிடுவதற்கு உடனடியாக திரையரங்குகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் தொலைதூரத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று(ஏப்ரல் 25) வெளியிடப்பட்டது.

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே ஃபெரடரிக் இயக்கியுள்ளார். திரையரங்கு உரிமை தவிர்த்து டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி உரிமை விற்பனை செய்யப்பட்டிருக்கும் பொன்மகள் வந்தாள் நேரடியாக மே முதல் வாரம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT தளத்தில் வெளிவரப்போவதாக செய்தி வந்தது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

 இது சம்பந்தமாக தயாரிப்பாளரை நாம் தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT தளத்தில் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது” என்று கூறுகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத சூழ்நிலையில் இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது , சுமுகமான முடிவுக்கு எப்படி வருவது என்பதை முடிவு செய்யக்கூடிய தலைமையும் ஆளுமையும் தமிழ்சினிமாவில் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்க உரிமையாளர் சங்கம் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு திரையரங்கிலும் டிஜிட்டல் தளத்திலும் ஒரே நேரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை திரையிடுவதற்கு கமல் முயற்சி செய்த போது அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர்.

அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்தும் கமலஹாசனுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமலுக்கு எதிராக அப்போதைய ஆளுங்கட்சி முதல்வராக இருந்த ஜெயலலிதா சாட்டை சுற்றியதால் அவருக்கு எதிராக எந்த கருத்தையும் கூறாமல் கமலுக்கு ஆதரவு கொடுக்காமல் அனைத்து திரைப்பட சங்கங்களும் வாய் மூடி மௌனம் காத்தது.

அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பம் எளிதாக நிறைவேறியது. அதிலிருந்து இன்றைய திரைத்துறை சூழல் அரசின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது . கடந்த வருடம் வெளியான கைதி திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நான்கு வாரங்களில் போட்ட முதலீடு அதற்கு இணையாக லாபம் கிடைத்ததால் விநியோகஸ்தர்கள் தரப்பில் எந்தவிதமான எதிர்ப்பும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களும் மௌனம் காத்தனர்.

எப்போது திரையரங்குகள் திறக்கப்படும்? அப்படியே திறக்கப்பட்டால் அச்சமின்றி பொதுமக்கள் திரையரங்கை நோக்கி வருவார்களா? என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இப்போது எவராலும் கொடுக்க முடியாது. தற்போதைய நிலவரப்படி ஆகஸ்ட் மாதம் வரை முழுமையாக அல்லது பகுதியாக ஊரடங்கு அமுலில் இருக்கும். தமிழ் சினிமாவின் மொத்த வருவாயில் 60% மட்டுமே தமிழகத் திரையரங்குகள் மூலம் கிடைத்து வருகிறது. எஞ்சிய 40% பிற மாநிலங்கள் வெளிநாட்டு விநியோக உரிமை மூலம் கிடைத்து வருகிறது. இதில் அதிக பங்களிப்பை செலுத்தி வரும் அமெரிக்கா, UK, மலேசியா சிங்கப்பூர் இந்த நாடுகளில் அக்டோபர் வரை திரையரங்குகளை திறப்பதை பற்றி சிந்திக்கக் கூட முடியாது என்கிற சூழல் நிலவி வருகிறது.

‘படத்தை தயாரித்து முடித்து விட்டு மூலதனத்தை முடக்கி வைப்பதற்கு தயாரிப்பாளரால் எப்படி முடியும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். அதேபோன்று திரையரங்கு திறக்கின்ற போது படத்தை வெளியிட வேண்டும் என்று கூறுகின்ற திரையரங்கு உரிமையாளர்கள் முன்கூட்டியே படத்தை விலைபேசி முன்பணம் கொடுப்பதற்கு தயாராக இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே ஓடிய திரைப்படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குத் தொகையை படம் ஓடி முடிந்தும் கொடுக்காமல் மாதக்கணக்கில் தாமதப்படுத்தி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு தயாரிப்பாளரின் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, எப்போது ரிலீஸ் செய்வது என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்’ என்கிறார் ஒரு மூத்த தயாரிப்பாளர்.

தமிழ்சினிமாவில் படங்களைஅவுட் ரேட் முறையில் திரையரங்கு உரிமையாளர்கள் எப்போதும் வாங்கியது இல்லை. சென்னை, கோவை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையரங்குகள் வெளியிடுவது கிடையாது.

சென்னை நகரைப் பொறுத்தவரை முன்பணம் கொடுத்து கூட படத்தை திரையிடுவது இல்லை. தமிழகம் முழுவதும் இருக்க கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அட்வான்ஸ் கொடுப்பது இல்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் மட்டுமே அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர் தயாரிப்பாளர் லாபத்தை ஈட்ட முடிகிறது. இல்லையென்றால் நஷ்டத்தை சிலநேரங்களில் இருதரப்பும் பல நேரங்களில் தயாரிப்பாளர் மட்டுமே சுமக்க வேண்டி இருக்கிறது.

படத் தயாரிப்பு, வினியோகம் இவ்விரண்டிலும் எந்த வகையிலும் உத்தரவாதமான நேரடி முதலீட்டில் பங்கு கொள்ளாத திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் படத்தை எங்கு வெளியிடவேண்டும் என்கிற முடிவெடுப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும்இல்லை என்கின்றனர். “தயாரிப்பாளர்கள் தரப்பில்

பிரச்சனையைப் பேசித் தீர்ப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், தொழில் ரீதியான மிரட்டல் விடுப்பது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் காலங்காலமாக கையாண்டு வரும் யுக்தியாக இருந்துவருகிறது. பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் நேரடியாக திரையிடுவதால் அப்படத்தை தயாரித்துள்ள 2D நிறுவனம் தயாரிக்கும்படங்களை நாங்கள் திரையிடமாட்டோம், என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் கூறியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.

அதை விட்டுவிட்டுஅந்த நிறுவனம் சார்ந்த உறவினர்கள் தயாரிக்கும் படங்களையும் திரையிடமாட்டோம் என்று கூறுவது, தொழில்ரீதியாக நடிகர் சூர்யா அவர் சார்ந்தவர்களை மிரட்டுவதாகவே தெரிகிறது” என்கிறது 2Dதயாரிப்பு நிறுவனத்தின் தரப்பு.

சூர்யா நடித்த சூரரை போற்று படம் வெளியாகவிருந்த சூழலில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அப்படம் வெளியாகவில்லை அந்தப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்பதை நேரடியாக கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர் சங்கபொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் . சுமார் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமை 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக 2D நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, ‘திரையரங்கு உரிமையை தவிர்த்து அனைத்து உரிமைகளும் வியாபாரம் செய்யப்பட்டிருப்பது உண்மை தான். இருந்தபோதிலும் ஒன்பது கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்படவில்லை எட்டு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே தனது இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நிலையில் திரைப்பட தயாரிப்பு, திரைப்பட வெளியீடு இவை இரண்டிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்வது என்பதை எதிர்வரும் காலங்களில் சர்வதேச திரையுலகம் விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களையும், புதிய வியாபார அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டும் கமலஹாசனின் வழியில் நடிகர் சூர்யா குடும்பம் களமிறங்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள் படம் போன்று வேறு சில படங்களும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதற்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு காரணமாக அடிப்படையில் விநியோகஸ்தரான டிரைடண்டு நிறுவன உரிமையாளர் ரவீந்திரன் OTT தளத்தில் படத்தை வெளியிட வழங்கிய உரிமையை திரும்பப் பெற்று வருகிறார்.

YNot ஸ்டுடியோ நிறுவனம் வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதுவரை ஒப்பந்தத்தை அவர்கள் ரத்து செய்யவில்லை’ என்கின்றனர்.

கமல்ஹாசன் 2013 ஆம் ஆண்டு டிஜிட்டல் தளத்தில் விஸ்வரூபம் படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும் அவரது கனவு ஏழாண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மூலம் நிஜமாகிறது. இது தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தயாரிப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வருமா? திரைப்படங்களை முதலில் எங்கு திரையிடுவது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக திரையரங்குகள் விஸ்வரூபம் எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.