எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் திண்டுக்கலில் ஆகஸ்ட் 6 அன்றுசெய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.வி.சேகர் உங்களுக்கு இந்தி தெரியும் எனக் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிரித்தப்படியே எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படித் தெரியும் என்று கேட்ட முதல்வர், அவர் முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர். பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்றால், அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் வரவே இல்லையே. அவர் அதிமுகவிலும் இருந்து கட்சியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதிமுகவில் சரியாக செயல்படாத காரணத்தால்தான் நீக்கப்பட்டார். ஆகவே, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை” என்று சாடினார்.
பதில் சொல்ல அவரை பெரிய கட்சித் தலைவராக தான் நினைக்கவில்லை எனவும், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார் என்றும் முதல்வர் விமர்சித்தார்.
பாஜகவில் அதிருப்தியில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் இணைத்துக்கொள்வோம்.” என்று பதிலளித்தார் முதல்வர்.