தியேட்டர்களுக்கு அழிவு இல்லை – கலைப்புலி தாணு

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வர இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், இப்படத்தை நேரடியாக ’ OTT யில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனால், திரையரங்குகள் இப்படம் வெளிவராது. இந்த விவகாரத்தை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்கள் – தயாரிப்பாளர்கள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வீடியோ ஒன்றை இன்று (ஏப்ரல் 28) வெளியிட்டுள்ளார்.

“பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளதற்காக திரையுலகம் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் கணிப்பு, அது தவறு என்பதாக இருக்கலாம். ஆனால், தவறில்லை என்பதுதான் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கருத்து.

காரணம், இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகி ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ஓடி, மே மாதம் ஓடிடியில் ஒளிபரப்பாகி இருக்கும். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.

திரையரங்குகளில் திரையிடாததால் அந்த தயாரிப்பாளருக்கு எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. OTT மூலமாக வரும் பணத்தையும் இழந்துவிட்டால் அவர் என்ன செய்வார். இதன்மூலம் பெரிய அளவில் பணம் வந்துவிட்டதாக இணையதளங்களில் கற்பனைக்கு அளவில்லாமல் எழுதுவார்கள். அந்த அளவுக்கெல்லாம் வந்திருக்காது. வரும் பணத்தையும் வைத்து 2-3 கோடி ரூபாய் என்ற சிறிய முதலீட்டில் வேறொரு படம்தான் எடுப்பார் தயாரிப்பாளர்.” என்று கூறியுள்ளார் தாணு.

தொடர்ந்து, “திரையரங்குகளுக்கு என்றைக்குமே அழிவு வராது. தொலைக்காட்சி வந்தபோதும், டெக், டிவிடிக்கள் வந்தபோதும் திரையரங்குகள் அழிந்தது என்று சொன்னார்கள், அழிந்ததா? திரையரங்குகளில் ரிலீசாவதற்கு முன்பே திரைப்படங்கள் இணையதளத்தில் வந்துவிடும். நம்மால் அதனை தடுக்க முடிந்ததா? அப்போது சினிமா அழிந்ததா?” என்று கேள்வி எழுப்பிய அவர்,

“அதுபோலதான் இந்த ஓடிடி தளமும். அமேசான் பிரைம் டைம் வருடத்திற்கு 15 படங்கள், அதுவும் பெரிய படங்களை வாங்கிவிடும். தற்போது, அத்தி பூத்தாற்போல சிறிய பட்ஜெட் படம் ஒன்றை வாங்கியுள்ளது. அதனை வரவேற்க வேண்டுமே தவிர தடை போடக்கூடாது. தயாரிப்பாளர்களின் நிலையைப் பாருங்கள். எத்தனை படங்கள் முடிவுக்கு வரும் தருவாயில் நின்றுள்ளன தெரியுமா? இதனால் எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

“இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து படத்தை திரையிட ஒத்துழைக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் கூடிப்பேசி எவ்வாறு திரையிட வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.” எனவும் தாணு வலியுறுத்தியுள்ளார்.