மதங்களை விலக்கி மனிதம் காப்போம்- நடிகர்சூர்யா

நடிகை ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்தும் விதமாகப் பேசியதாகக் குறிப்பிட்டு சமீபகாலமாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தனியார் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியில் ’ராட்சசி’ திரைப்படத்திற்காக விருது பெற்ற நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டு சில கருத்துக்களை மேடையில் பேசினார். அவர் பேசும் போது, ’பிரகதீஸ்வரர் ஆலயம் உதய்பூர் அரண்மனை போன்று மிகச்சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகிறது, ஆனால் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது’ என்பதாகத் தான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது பார்த்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், ’கோயிலுக்காக அதிகம் பணம் கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிக் கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோயிலுக்குள் போகவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டு மிகப் பெரிய சர்ச்சைகள் வெடித்தது. அவருக்கு எதிராகவும், ஆதரவு தெரிவித்தும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

’கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். “மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை” என்பது ’திருமூலர்’ காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.” என்று குறிப்பிட்டு ஜோதிகா பேசியதன் உண்மை நோக்கத்தையும், அதைப் புரிந்துகொள்ளாதவர்களின் மனநிலை குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். ‘கொரோனா’ தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். ’மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள்.” என்று கூறி ஜோதிகா கூறிய கருத்து சரியானதே என்பதற்கு விளக்கம் அளித்துள்ளதுடன் தானும் அதனைப் பின்பற்றுவேன் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்.

அத்துடன் “ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டனர். ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்றும் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.