அவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்

அவதார் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த நாளில்வெளியிடுவது சாத்தியமில்லை என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகங்களுக்கான கதைகளை எழுதுவதில் ஜேம்ஸ் கேமரூன் கவனம் செலுத்திவந்த நிலையில் 2020 ஜனவரி மாதத் துவக்கத்தில் அவதார் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டிருந்தார்.

மேலும், அவதார் இரண்டாம் பாகம் வரும் 2021ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பட வேலைகள் முடங்கிப் போனது. இதனால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு ஜேம்ஸ் கேம்ரூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அவதார் ரசிகர்களே, நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.கொரோனா அச்சுறுத்தலால் ‘அவதார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத வகையில் நீண்ட தாமதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. தற்போது படத்தின் ஷூட்டிங் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் இந்த வைரஸ் எங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பைபோன்று அந்தப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்னைகளுக்கு முன்பாக, 2021ஆம்  ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கொண்டுவருவதற்கான அனைத்து வேலைகளும் சரியான திசையில் சென்று கொண்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா தாக்கத்தால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போயுள்ளது.

இந்த தாமதத்தால் என்னை விட அதிகமாகக் கவலைப்படுவோர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் எங்களுடைய நடிகர்களின் சிறப்பானநடிப்பினாலும், பண்டோரோ உலகத்தை உருவாக்கி, கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வேடா டிஜிட்டல் நிறுவனத்தின் பணிகளாலும் நான் நிம்மதியுடன் இருக்கிறேன். டிஸ்னி நிறுவனத்திடமிருந்து குறிப்பாக ஆலன் ஹார்ன் மற்றும் ஆலன் பெர்க்மேன் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இவை அனைத்துக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இத்தனை வருடங்களாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நாங்கள் திரையரங்கில் வெளியிடும் படத்தின் மூலம் நன்றிக்கடன் செலுத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.