இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது – நீதிமன்றம் கேள்வி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசைகோர்ப்புஅரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக

 ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்தநிலையில், இளையராஜா சென்னை ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளது. அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டூடியோ சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இளையராஜா பயன்படுத்திய இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு இளையராஜா வைத்திருந்த அனைத்து பொருட்களும் வேறு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் கேட்டு தெரிவிக்கிறேன்” என்றார்.
அதற்கு நீதிபதி, “எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒருநாள் தியானம் செய்ய இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பதை தாண்டி, நீண்ட கால பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக ஏன் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.பின்னர் விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி அதற்குள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.