படத்தின் நாயகியாக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார்தான் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்தாக வேண்டும் எனும் நிலை.அதை மிகப்பொறுப்பாகச் செய்திருக்கிறார்.ஒரு சாதாரண பெண்மணி அசாதாரண சூழல்களைச் சந்திக்கும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்பதை தத்ரூபமாகச் செய்திருக்கிறார்.
மர்மத்தைத் தேடிப்போகும் மாணவராக நடித்திருக்கும் சரண் லக்கராஜு,விசித்திரமான பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்படக்கூடியவராக நடித்திருக்கிறார்.
அந்த அறைக்குள் நான் போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கும் பெண்ணாக நடித்திருக்கும் ப்ரித்திபகதாலா நன்று.
சூர்ய ராஜ் வீரபத்தினி,சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு பயந்து,நம்மையும் பயமுறுத்துகிறார்கள்.
தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலும் இருட்டிலேயே படமாக்கவேண்டியிருப்பினும் அதிலும் நேர்த்தி காட்டியிருக்கிறார்.ஒளியமைப்பு
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசைதான் தூணாக இருக்கும் என்பதை உணர்ந்து இசையமைத்து இருக்கின்றார் வெங்கி.
படத்தைத் தொகுத்திருக்கும் அகுல் அவினாஷ்,பல குழப்பமான காட்சிகள் ரசிகர்களுக்கு எளிதில் புரியும்படி இருக்கவேண்டுமென தொகுத்து வழங்க மெனக்கெட்டிருக்கிறார்.
நாட்டுப்புறக் கலைஞர்,குழந்தை பிறப்பதில் சிக்கல் ஆகிய இருவிசயங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கீர்த்தன் நடகவுடா.படத்தின் மையமான பெண்ணை நாட்டுப்புறக் கலைஞர் என்று வைத்திருப்பதால் பல காட்சிகளை நியாயப்படுத்த முடிகிறது.முற்றிலும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதையெனினும் இதுபோன்ற கதைகள் ஏராளமாக நாட்டுப்புறங்களில் புழங்குகின்றன என்பதை இப்படம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.