அசுரகுரு ட்ரெண்டிங்கில்

விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் அசுரகுரு திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏ.ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் அசுரகுரு. இந்தத் திரைப்படத்தின் முதல் டிரெய்லர் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. ‘ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கோடிக்கணக்கான பணத்தை ஒருவர் கொள்ளையடித்தார்’ என்பதாகத் தொடங்கும் அந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இந்தப் படத்தில் புத்திசாலித்தனமான வழிகளில் பணத்தைக் கொள்ளையடிக்கும் மாபெரும் திருடனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

அசுரகுரு திரைப்படம் நாளை (மார்ச் 13) ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ‘அவனை பொறுத்தவரைக்கும் பணம் ஒரு ராணி மாதிரி’, ‘டெக்னிக்கலி ஸ்ட்ராங்கான ஒருத்தனால தான் இவ்வளவு டீட்டெயில்டா கொள்ளையடிக்க முடியும்’ என டிரெய்லரில் இடம்பெறும் வசனங்கள் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் குறித்து விளக்குகிறது.

பரபரப்பான பின்னணி இசை, எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் காட்சிகள் என இந்த டிரெய்லரும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அதே போன்று சமீபத்தில் வெளியான ஸ்னீக் பீக் வீடியோ, கொள்ளையனான விக்ரம் பிரபு கையாளும் நுணுக்கங்களை உணர்த்துவதாக உள்ளது. அந்த வீடியோவில் விக்ரம் பிரபு வங்கி ஒன்றில் கொள்ளையடிப்பதாகக் காட்சி இடம்பெற்றுள்ளது. காவல் அதிகாரிகள் வங்கியில் தீவிர பாதுகாப்புப் பணியில் இருக்கும்போதே விக்ரம் பிரபு கொள்ளையடிப்பது போன்றும் அதே நேரத்தில் கதாநாயகி மஹிமா நம்பியார் விக்ரம் பிரபுவின் வீட்டுக்குச் சென்று சோதனையிடுவதாகவும் அந்த வீடியோ உள்ளது.

இந்த இரு வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததோடு யூடியூப் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, மனோபாலா, சுப்புராஜு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.