தமிழ் சினிமா முடங்கியது படப்பிடிப்புகள் ரத்து

0
216
The historic State Theater (formerly the Lyric Theater) in downtown Traverse City, Michigan.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக வரும் மார்ச் 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கி உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ள சூழலில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழகத்திலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் வெளிவரக் காத்திருந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திரைத்துறையிலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தின் பல முன்னேறிய நாடுகள் கூட கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து பல லட்சம் கோடிகளை இதற்காக அறிவித்து கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான முயற்சிகளை முழுவீச்சில் எடுத்து வருகிறது. நமது மத்திய அரசும், மாநில அரசும் இதன் அபாயத்தை நன்கு உணர்ந்து தமது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு விதமான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வந்தபின் போராடுவதை விட வரும் முன் காப்பதே உத்தமம் என்ற அளவில் போராடும் நமது அரசுகளை மீறியும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. முதல் பலியும் இந்தியாவில் ஆரம்பித்து விட்டது. பல்வேறு விதமான வசதிகளும் உள்ள மேற்கத்திய நாடுகள் கூட இந்த வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராட முடியாமல் திணறி வரும் நிலையில் பாதுகாப்பு வசதிகள் குறைந்த நமது நாட்டில் இதை நாம் அனைவரும் இணைந்து போராட வில்லை என்றால் பாதிப்புகளை தடுப்பது மிகவும் சிரமம் ஆகும்.

அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்பட பணிகளை 19-03-2020 முதல் நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது. நமது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தற்போது குறைவாக உள்ளது என்றாலும் திரைப்படத்துறையில் பாதுகாப்பு சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ளதால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 19-03-2020 முதல் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்து பிரிவு திரைப்பட பணிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் பொருளாதார ரீதியிலும், தயாரிப்பு ரீதியிலும் பெரும் சிரமங்களை எதிர் கொள்வார்கள் என்றாலும் நமது தொழிலாளர்களின் வாழ்வு மிகவும் முக்கியமானது என்பதால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். எனவே திரைப்படத் தொழிலாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரகசியமாக படப்பிடிப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here