மாஸ்டர் போராட்ட களமா?

கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காக உயர்ந்திருந்தது.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் தோற்றம் ஒரு வைபரேஷனை உருவாக்கியிருக்க, இன்று(15.01.20) விஜய் சேதுபதி இடம் பெறும் “மாஸ்டர்” படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை, சோஷியல் மீடியாக்களில் விடுமுறை நாளில் கூட ‘மாஸ்டர்’ என்ற வார்த்தை டிரெண்டிங்கில் இருந்ததன் மூலம் அறியலாம். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் செகெண்ட் லுக்கிலும் விஜய் இடம்பெற்றிருந்தார்.

விஜய்யை படத்தில் எதிர்கொள்ளப்போகும் விஜய் சேதுபதியின் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை அறியவே ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்குக் காரணம், கைதி திரைப்பட வில்லனுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்த கேரக்டர் தான்.

செகண்ட் லுக்கில் விஜய்யின் கெட்டப் கையில் காப்பு, கருப்பு கண்ணாடி, கருப்பு சட்டையுடன் இடம்பெற்றிருக்கிறது. விஜய் கேமராவை பார்த்து அமைதியாக இருங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. கருப்பு நிற உடைகளை அணிந்தபடி வரிசையாக திரும்பி நின்றுகொண்டிருக்கும் மாணவர் கூட்டத்தினுள் தனியாக கேமராவை பார்த்தபடி நிற்கிறார் விஜய்.

 இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அதனால், இது கல்லூரியில் நடைபெறும் சண்டை காட்சியின் ஓப்பனிங்காக இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் உருவாகியிருக்கின்றன.
 மாணவர்கள் அனைவரும் கருப்பு நிற உடையுடன் நின்றுகொண்டிருப்பது எந்தக் கல்லூரியிலும் சாதாரணமாக நடைபெறும் ஒன்று அல்ல என்றும், இது ஏதோ ஒரு போராட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும், இது கல்லூரியில் ஒரு இயக்கமாக இருக்குமா என்ற கேள்விகளும், யோசனைகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.