2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு முன்பே ஜனவரி 9ஆம் தேதி தனியாக ரிலீஸானது தர்பார். பொங்கல் விடுமுறைக்கு தியேட்டரில் வரும் படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகக் கூட்டத்திற்கு ஒரே விருந்தாக தர்பார் படைக்கப்பட்டது. ஆனால், சென்ற வருடத்தின் நிலை வேறு.
2019ஆம் வருடம் பொங்கலன்று ரஜினி நடித்த பேட்ட படம் வெளியான அதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் ரிலீஸானது. இரண்டு படங்களும் சம பலத்தில் போட்டியாளர்களாக இருந்த காரணத்தால் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. ஆனால், இந்த வருட பொங்கலுக்கு வெளியான தர்பார் படத்துடன் ஆறு நாட்கள் கழித்து தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் போட்டியாகக் களமிறங்கியது. இது நேரடி மோதல் இல்லையென்றாலும், தர்பார் படத்தின் பார்வையாளர்களை சில நாட்களில் தன் பக்கம் திருப்பும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
முதல் நாள்(15.01.2020) பட்டாஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் மூலம் 5 கோடி அளவுக்கு வசூல் கிடைத்தது. தர்பார் படம் அன்று 13.83 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இரண்டாம் நாளில்(16.01.2020) 3.37 கோடி ரூபாயாக பட்டாஸ் வசூல் குறைந்திருக்கிறது. அதேவேளை ரஜினிகாந்தின் தர்பார் 11.02 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. மாமனாரின் தர்பார் அலையில் மருமகன் தனுஷின் பட்டாஸ் தத்தளித்து வருகிறது.