RRRபடம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி

ராஜமெளலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக யார் நடிப்பார் எனக் கேள்விகள் எழுந்த நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஜமெளலி.

இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டரான பாகுபலியின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் தேஜா இணையும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற மெகா பட்ஜெட் திரைப்படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் வரலாற்றை மையப்படுத்தி, சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகி வருகிறது.

தொடக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். இரண்டாவது ஷெட்யூலையும் கடந்து வேகமாய் நடந்து வந்த படப்பிடிப்பின் மத்தியில், டெய்ஸி எட்கர் தனிப்பட்ட சில காரணங்களால் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பின் அந்தப் பாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
இதனிடையில், படப்பிடிப்பில் அடுத்தடுத்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்பட்ட காயம், ஹாலிவுட் நடிகையின் திடீர் விலகல் என சற்று பின்னடைவைச் சந்தித்தது படக்குழு.
இதைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்துக்கு நாயகி இல்லாமல் கதையை ராஜமெளலி மாற்றிவிட்டார் என செய்திகள் வெளிவரத் தொடங்கின.
படக்குழு தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், வதந்திகள் வலிமையடைந்தன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படக்குழு செவ்வாய்கிழமை (நவம்பர் 19) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், “ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த ஆண்டு மிகவும் தனித்துவமானது. 70 சதவிகிதப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக நடிப்பவரையும், வில்லனாக நடிப்பவரையும் நாளை (நவம்பர் 20) அறிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில்,நவம்பர் 20மாலை இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இங்கிலாந்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இவர்.

இந்த அறிவிப்புடன், நடிகர் ரே ஸ்டீவன்சன் இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்றும், அலிசன் டூடி வில்லியாக நடிக்கிறார் என்றும் அறிவித்தது படக்குழு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ராம்சரணுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.