தன்னம்பிக்கை நாயகன் விஜய்

தமிழ் சினிமாவில் 28 ஆண்டுகளில் 61 படங்களில் கதாநாயன் இவற்றில் 50% படங்கள் வெற்றி பெற்று கல்லாவை நிரப்பியது இந்த அசாத்தியத்தை நிகழ்த்திய நடிகர் விஜய் 46வது பிறந்த நாள் இன்று,

ஹேஷ்டேக்குகள், விஜய்யின் படங்கள், ரசிகர்கள் பிரத்யேகமாக வடிவமைத்த போஸ்டர்கள் என சமூக வலைதளங்கள் களை கட்டி வருகின்றன. விஜய்யின் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அவரது அரசியல் மீதான எதிர்பார்ப்பும் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரிக்கும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்த நடிகராக தமிழ் சினிமா உலகில் வலம் வருகிறார்.

இதெல்லாம் ஒரு ஜனரஞ்சக சினிமாவில் வருவது போல உடனடியாக ஏற்படுவதில்லை. அதற்கான அர்ப்பணிப்பும், சகிப்புத்தன்மையும், எல்லாவற்றுக்கும் மேல் சளைக்காத உழைப்பும் இருந்தால் மட்டுமே இந்த உயரம் சாத்தியம்.
விஜய்யின் மீதான விமர்சனங்களில் அதிகம் வைக்கப்படுவது, “அவரது தந்தை S.A.சந்திரசேகர் மூலம் எளிமையாக திரைத்துறைக்குள் அவர் வந்துவிட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டது என்பன போன்ற பல விமர்சனங்களை காணலாம்.
தந்தை இயக்குநர் என்பதால் விஜய் மற்ற அறிமுக நடிகர்கள் போல தடுமாற்றங்களை சந்திக்காமல் வேண்டுமானால் வந்திருக்கலாம். ஆனால், இந்த உயரத்தை அடைவதற்கான உழைப்பும் மெனக்கெடலும் விஜய்யிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.
வாரிசு நடிகர்கள் இந்திய சினிமாவில் தொடர்ந்து வலம் வந்து, திரைத்துறையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அளவிற்கு வளர்ந்து விடும் நிலையில், விஜய் இதில் விதிவிலக்கே. எல்லோரையும் போல வெற்றிப்படங்கள், அதிக சம்பளம், தன் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு ஓயும் முன்பே ஓய்வு என விட்டில் பூச்சி போல மறையாமல், தனக்கென ஒரு பாதை, தன் தொழில் மீதான அங்கீகாரத்தை செப்பனிடுதல், புகழுக்கு மயங்காமல் தன் ஆரம்பகால ஈடுபாட்டை தொடர்ந்து பாதுக்காத்தல், விடா முயற்சி என ஒரு வெற்றியாளன் எதைப் பின்பற்றுவானோ அதை தொடர்ந்து பின்பற்றி வருபவர் நடிகர் விஜய்.
விஜய் தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளாார். இந்தப் படங்களின் வெற்றியை காலத்தின் வாயிலாக கவனித்துப் பார்க்கும் போது, அந்தந்தக் கால ஓட்டத்தின் மனப்போகை பிரதிபலிக்கும் விதமாகவும் ஜனரஞ்சக சினிமாவின் போக்கை தீர்மானிக்கும் படங்களாக அமைந்துள்ளன.
தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெற்றி(1984) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை என மசாலாபடங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் வணிக ரீதியாகபலம் பெறாத நடிகராகவே வலம் வந்துள்ளார் விஜய்.
விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக, இந்த நிலையை மாற்றியதுவிஜய்யின் முதல் பிளாக்பஸ்டராக அவரது திரைவாழ்வில் அடியெடுத்து வைத்தது. அதன் பின்னர் வந்த லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் விஜய் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியது,
அதே சமயம், இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கென ரசிகர்கள் பட்டாளமும் உருவாகத்துவங்கியது. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களும் 1997 ஆம் ஆண்டிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படங்கள் விஜய்யை ஒரு கண்ணியமான காதலனாக ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்க வைத்தது. எழில் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும், விஜய்யை அனைத்து எளிய மனங்களிலும் கொண்டு சேர்த்த படமாகும்.
விஜய்க்கென பிரத்யேகமான ‘ஃபார்முலா’, விஜய் படங்கள் இப்படத்தான் இருக்கும் என அவரது ரசிகர்களும் ஒரே வட்டத்துக்குள் தங்கள் நாயகனை கொண்டாடி வந்த வேளையில் 2000 ஆம் ஆண்டில் வெளியான குஷி, அனைத்தையும் மாற்றி அமைத்தது. எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சமகால காதல் கதையாக அமைந்தது முக்கியமான அம்சமாகும். இது விஜய்யை அடுத்த பாய்ச்சலுக்கு எடுத்துச் சென்றது.

விஜய்யின் திரைவாழ்க்கைமுழுக்கவே ஒரு பொதுவான அம்சத்தை காணலாம். இயக்குநருக்கான சினிமா ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் முழுக்க முழுக்க தன் ரசிகர்களை மனதில் வைக்கும் ஒரு படம். அதன் பின்னர் வந்த பிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், பகவதி, வசீகரா என கலவையான படங்களில் நடித்துவந்த விஜய் ஆக்க்ஷன் ஹீரோவாகவும், இன்னும் சொல்லப்போனால் பக்கா மசாலா ஹீரோவாக மாறிய படம் ரமணா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திருமலை.
இப்படம் விஜய் மீதான வணிக ரீதியான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. மென்மையாக, உருகி உருகி காதலிக்கும் காதலன் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு மாற்றிய படமிது. திருமலை அடுத்த வருடம் விஜய்யின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்துக்கு ரசிகர்களை தயார்படுத்தியது என்றே சொல்லலாம். 2004 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான கில்லி, அவரது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். பரபரக்கும் ஆக்க்ஷன், கபடி ஆட்டம், சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை என இளைஞர்களை கண்முன் கொண்டு வந்த விஜய். ரஜினிக்கு படையப்பா கொடுத்த வெற்றிக்கு இணையான ஒன்றை விஜய்க்கு அளித்தது கில்லி.
அதன் பின்னர் வெளியான  திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி ஆகிய படங்கள் விஜய் படங்களுக்கு  ஓப்பனிங்கை கொடுத்தது. 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி,  விஜய் படங்களின் மீதான எதிர்பார்ப்பை இந்திய அளவில் உயர்த்தியது.
மேலும் இதன் வணிக ரீதியிலான வெற்றி, திரைக்கதை அமைப்பு ஆகியவை தற்போது தேர்ந்தெடுக்கும் படங்களிலும் எதிரொலிப்பதை பார்க்க முடியும். துப்பாக்கி விஜய்யின் படங்களுக்கு கூடுதல் ஸ்டைல், தேர்ந்த தொழில்நுட்பம் என அடுத்த கட்டத்துக்கு அவரையும் அவரது ரசிகர்களையும் நகர்த்தியது.

எல்லாகாலகட்டத்திலும் விஜய்யால் மட்டும் எப்படி தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது? இதற்கு முக்கியமான காரணம், சமகாலத்தன்மையோடு பயணிக்கும் இயக்குநர்களோடு பயணிப்பதே. ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது,

அதே கதை, அதே உடை என விஜய் இடைப்பட்ட சில காலங்களில் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், அந்தக் குறைகளை நீக்கிவிட்டு ரசிகர்களின் மாறி வரும் எண்ண ஓட்டத்துடன் பயணிக்க தொடங்கியது அவரது வெற்றியை தொடர செய்தது

வரவிருக்கும் மாஸ்டர், அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தைகளைப் பற்றிய செய்திகள் விஜய் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இயக்குநர்களின் படம், ரசிகர்களுக்கான பக்கா மாஸ் படம் என பயணித்து வந்த விஜய், சமீப வருடங்களில் இந்த இடைவெளியை இணைத்து வருவது கவனிக்கத்தக்கது. இது நிச்சயம் ரசிகர்களுக்கும், திரைத்துறைக்கும், விஜய்க்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துவோம்!!