சிவகார்த்திகேயன் டாக்டர் எப்படி

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில், அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுவருகிறது.

சிவகார்த்திகேயன் கடைசியாக பி.எஸ் மித்ரன் இயக்கிய ‘ஹீரோ’வில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இவ்விரு படங்களின் வேலைகளையும் நிறுத்தி வைத்துள்ளது படக்குழு.

இச்சமயம் ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் ஆதர்ச நாயகனின் அடுத்த படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதனாலேயே சமூக வலைதளங்களில் தங்கள் நாயகர்களின் புகைப்படங்களையும், பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் நினைவுகளையும் அதிகளவில் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ‘டாக்டர்’படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் ஸ்டில்களை ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். மேலும் அவற்றில் உள்ள சிவகார்த்திகேயனின் சீரியஸ் மற்றும் ரொமாண்டிக் தோற்றத்தால் ரசிகர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். ‘டாக்டர்’ ஒரு அதிரடி கலந்த காமெடி டிராமா என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் சென்னை மற்றும் கோவாவில் படமாக்கப்படவுள்ளது. சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் ஆகியோரும் தங்களது தொலைக்காட்சி நாட்களில் இருந்தே நெருக்கமான நண்பர்களாக இருந்து வருபவர்கள். இதனால் இவர்களின் ஒன்றிணைவு கவனிக்கத்தக்கதாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிரியங்கா மோகனன் நாயகியாக நடிக்க, வினய், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் அனிருத் டாக்டருக்கும் இசையமைக்கவுள்ளார்.