ரஜினிக்கு காத்திருக்கும் சம்மன்

நடிகர் ரஜினிகாந்துக்கு விரைவில் சம்மன் அனுப்ப இருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என குற்றம்சாட்டினார். அதன்பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று கூறிய ரஜினியை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 25ஆம் தேதி காலை 10 மணிக்குத் தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தெரிந்த விவரங்களை சொல்ல வேண்டும் என ரஜினிக்கு ஜனவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், நேரில் ஆஜராகாத ரஜினிகாந்த், நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கேள்விகளை எழுத்துப்பூர்வமாகத் தந்தால் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதன்பிறகு கொரானா காலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறவில்லை.தற்போது மீண்டும் விசாரணை துவங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்திடம் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளது விசாரணை ஆணையம். இதுதொடர்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர், “வரும் ஜனவரி மாதத்துக்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அனுப்பி அவர் விசாரணை செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.