விஜய் 64 படத்தில் விஜய் கேரக்டர் என்ன?

விஜய் 64 திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமெடுத்திருப்பதைத் தொடர்ந்து,

அதன் தகவல்களும் வேகவேகமாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டு
சில வதந்திகளையும் வெளியிட்டுவருகின்றனர் சிலர்.
அவற்றில் சிலவற்றை படத்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து எழுதியிருக்கும் செய்தி இது.

நடிகர் விஜய் மருத்துவ மாணவன் கேரக்டரில் நடிப்பதாக ஒரு செய்தியும், மருத்துவக் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக ஒரு செய்தியும் வெளியாகியிருக்கிறது.

இதில், பேராசிரியராக நடிக்கிறார் என்ற செய்தியில் உண்மை இல்லை என படக்குழுவினர் மறுக்கின்றனர். பிறகு இந்த வதந்தி உருவான காரணம் ஏன்?

விஜய்யின் 64ஆவது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். சமீபத்தில் மிகப்பெரும் வெற்றிபெற்ற கைதி திரைப்படத்தின் ‘ஹீரோ’ கேரக்டரை, கமல்ஹாசனின் விருமாண்டி திரைப்படத்தின் பாதிப்பிலிருந்து உருவாக்கியதாக லோகேஷ் கூறியிருந்தார்.

அதனை அடிப்படையாக வைத்து, அவர் விஜய்யுடன் இணைந்துள்ள திரைப்படம் மருத்துவத் துறை தொடர்பானது என்று தெரிந்ததும், கமல்ஹாசனின் ‘நம்மவர்’ திரைப்படத்தை இதனுடன் முடிச்சிட்டுவிட்டனர். அதனால், விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின.
விஜய் பேராசிரியராக நடிக்கவில்லை என்ற தகவலை, படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் மறுக்கும் சமயத்தில் மாணவரா? இல்லையா? என்பதைப் பற்றிக் கூறவில்லை. ஷூட்டிங்கை நேரடியாக பார்த்தவர்களிடம் விசாரித்தபோது, ஆரம்பகட்ட ஷூட்டிங் மட்டுமே நடைபெறுவதால் சரியாக எதையும் சொல்லமுடியவில்லை என்கின்றனர்.
விஜய்யுடன் கல்லூரியில் நடிக்கும் சாந்தனு, மாளவிகா மோஹனன், சௌந்தர்யா ஆகியோரின் கேரக்டருடன் ஒப்பிடும்போது அவர்கள் விஜய்க்குக் கொடுக்கும் மரியாதை ஒரு சீனியருக்குக் கொடுக்கும் மரியாதையாகவே இருக்கிறது.
பேராசிரியருக்கும் மாணவர்களுக்குமான காட்சிகளாக அவை இல்லை என உறுதியாக சொல்கின்றனர். ஆனால், மருத்துவத் துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களின் ஏக்கத்தை மாணவர்களிடையே உணர்ச்சிபொங்க விஜய் பேசும் வகையில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

டாக்டர்’ என்பது இப்படத்தின் டைட்டிலாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுபற்றி இப்படத்தின் டிசைனர்கள் தரப்பில் விசாரித்தபோது, இதுவரையில் எந்த டைட்டிலும் முடிவாகவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், பலவிதமான படத்தின் போஸ்டர்களை மட்டும் இப்போதைக்கு தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஸ்டர் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோவைத்தான்(கழுத்தில் ஐடி கார்டுடன் விஜய் இருக்கும் படம்) சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங் செய்தனர்.

நான்கு டைட்டில்கள் இதுவரை கிடைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை டெல்லி ஷூட்டிங் முடிவடைந்த பிறகு இறுதி செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

டாக்டர் என்ற டைட்டிலும் அவற்றில் ஒன்று. விஜய்யின் கேரக்டர் மருத்துவத் துறை சார்ந்ததாக இருந்தாலும், மொத்தமாக இந்தத் திரைப்படம் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேரவேண்டிய வகையில் உருவாக்கப்படுகிறது. எனவே, கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பிரதிபலிக்கும் வகையிலான டைட்டிலுக்காக காத்திருக்கின்றனர் என்கின்றனர்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதுவரை அருகருகே கண்டிராத இரு நடிகர்களை ஒரே ஸ்கிரீனில் பார்க்க ரசிகர்களும் தயாராகிவந்தனர். ஆனால், ஷூட்டிங்க் தொடங்கிய பிறகும் விஜய் சேதுபதி அந்தப்பக்கம் தென்படாததால், அவருக்கு இந்தப்படத்தில் நடிப்பதில் தயக்கம் என்று சில செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து இப்படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் டீமிடம் விசாரித்தபோது “விஜய் சேதுபதிக்கு கடைசி ஷெட்யூலில் தான் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.

காரணம், பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருப்பதால், அவரது காட்சிகளை கடைசி ஷெட்யூலில்(2019 வருட இறுதியில்) எடுத்துக்கொள்ளலாம் என விஜய் கூறினாராம்.
மேலும், மற்ற காட்சிகள் அனைத்தையும் எடுத்து முடித்த பிறகு, அவற்றை விஜய் சேதுபதிக்கு போட்டுக்காட்டிய பிறகு, விஜய் சேதுபதி-விஜய் நேரடியாக சந்திக்கும் காட்சிகளை எடுத்தால் அதன் தீவீரத்தன்மை அதிகமாக இருக்கும் என டைரக்டோரியல் டீமில் யோசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.