களவாணி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசான போது எத்தகைய பிரச்னையை சந்தித்து வெளியானதோ, அதே போன்று களவாணி-2 படமும் டைட்டில் பஞ்சாயத்து, பைனான்ஸ் பஞ்சாயத்து என பல விஷயங்களில் சிக்கி தட்டுத்தடுமாறி வெளியானது. ஆனால் வசூல் இல்லாத காரணத்தினால் வந்த வேகத்திலேயே இந்தப் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.
ஜோதிகா நடிப்பில் இன்றைய கல்வி முறையில் நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ராட்சசி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக இந்தப் படத்தால் சாதனையை மட்டுமல்ல சாதாரண வசூலைக் கூட நிகழ்த்த முடியாமல் போனது.
ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படம் குரங்கு அளவுக்குக் கூட வசூலில் முன்னேற முடியாமல் முதல் வாரத்துடன் நின்று போனது. வசூலும், பட வெளியீட்டிற்குச் செலவழித்த சுமார் ஒரு கோடி ரூபாய் அளவு கூட தமிழகத்தில் இந்த படத்திற்கு வருவாய் கிடைக்கவில்லை.
தர்மபிரபு பெற்ற வெற்றியை வைத்து யோகிபாபு நடித்த கூர்க்கா படத்தை ரிலீஸ் செய்தனர். தர்மபிரபு அளவிற்கு இந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கிய வினியோகஸ்தர்கள் 15 லட்ச ரூபாய் லாபம் கிடைத்ததாகக் கூறினர்.
படைப்பு ரீதியாக தோழர் வெங்கடேசன், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான கொளஞ்சி ஆகிய இரு படங்களும் பாராட்டுகளைப் பெற்றாலும் வசூலில் தோல்வியைத் தழுவியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தது. படம் முழுக்க கதாநாயகன், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பேசிய முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை வாங்கி வியாபாரம் செய்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் கூறுகிறது.

பிற படங்கள் எல்லாம் சம்பிரதாய அடிப்படையில் வந்து போனது. இதில் சந்தானம் நடித்து வெளியான A1 படம் நகர்புறங்களில் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்
1. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
2. களவாணி- 2
3. ராட்சசி
4. போதை ஏறி புத்தி மாறி
5. கொரில்லா
6. கூர்க்கா
7. தோழர் வெங்கடேசன்
8. வெண்ணிலா கபடிக்குழு-2
9. ஆடை
10. கடாரம் கொண்டான்
11. உணர்வு
12. A1
13. ஆறடி
14. சென்னை பழனி மார்ஸ்
15. கொளஞ்சி
மொத்தத்தில் ஜூன் ஜூலை மாதங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மந்தமாகவே இருந்தது.
நாளை: ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்