மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன், தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண், ஜூங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சசிகுமாருடன் கொம்பு வெச்ச சிங்கமடா, விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும் என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் மணிரத்னம் அதிக பொருட்செலவில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மடோனா செபாஸ்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிரத்னத்தை அவரது வீட்டில் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘நான் எனது உற்சாகத்தைக் கட்டுப்படுத்தப் போகிறேன், மேலும் இப்படமே பேசட்டும் என அனுமதிக்கிறேன்’ என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
மேலும் மடோனாவின் இப்பதிவினால் அவரும் படத்தில் நடிக்கவுள்ளாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னமே தயாரிக்கவுள்ளதால் அதன் நிமித்தமான சந்திப்பாகவும் இருக்கலாம் எனப்படுகிறது. எனவே உறுதியான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.