இமான் இசையில் பாடிய யூடியூப் பிரபலம்

பிரபுதேவா நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’.

இந்தத் திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கும் இந்த படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சூரி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்கள் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்தில் மிக முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைத்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் இடம்பெறும் உதிரா உதிரா எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது

மதன் கார்க்கியின் வரிகளுக்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மரியா ரோ வின்சென்ட் இணைந்து பாடியுள்ள ரொமாண்டிக் மெலடியான ‘உதிரா உதிரா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும் ஜூன் 21 ஆம் தேதி ஜிகேபி-இன் வரிகளுக்காக ஷிகா பிரபாகரன் மற்றும் சுகுமார் இணைந்து பாடிய ஜிட்டான் ஜிட்டான் ஜிணுக்கு என்ற பாடல் வெளியாகியிருந்தது. துள்ளலான இசையுடன் அமைந்த இந்த பாடலில் பிரபுதேவாவின் அசத்தல் நடனம் இடம்பெறும் என்று தெரிகிறது.

‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் பிரபுதேவாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் 26 அன்று திரைப்படத்தின் தீம் மியூசிக் மற்றும் மற்ற பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தன்னம்பிக்கையூட்டும் வரிகளுடன் விழுவதும் எழுவதும் தானடா வாழ்க்கையே

புத்துணர்வூட்டும் இசையுடன் போங்கு போங்கு

ஆழமான வரிகளுடன் மகராணியே மற்றும் மகராசனே

போன்ற பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

போங்கு போங்கு பாடலை கபிலனின் வரிகளுக்காக தியாகராஜா சுப்பிரமணியம் பாடியுள்ளார். மற்ற பாடல்களை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். விழுவதும் எழுவதும் பாடலை அஷ்வின் ஷர்மாவும், மகராணியே பாடலை பாடகர் ஸ்ரீனிவாசும், மகராசனே பாடலை வர்ஷா ரஞ்சித்தும் பாடியுள்ளனர்.

இமானின் இசையில் விஸ்வாசம் திரைப்படத்திற்காக சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடலைப் பாடி வெளியிட்டதன் மூலம் பாடகி வர்ஷா யூடியூபில் பிரபலமானார்.