சிந்துபாத் வெளியாவதில் தொடரும் சிக்கல்

நடிகர் சங்க தேர்தலைக் காட்டிலும் தற்போது அதிகமாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது சிந்துபாத் வருமா வராதா என்கிற விவாதம்.

ஜூன் 21ஆம் தேதி விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் வெளியாவதாக இருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர், பாகுபலி தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய ரூ. 17.65 கோடி தொகையை செலுத்தாததால் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை விலக்கப்படாததால் படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் ஜூன் 28 அன்று சிந்துபாத் படம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் சிந்துபாத் விளம்பரம் பகிரப்பட்டு வருகிறது.

சிந்துபாத் ஜூன் 21அன்று உறுதியாக வந்துவிடும் எனக்கூறியதை நம்பி ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்தனர். அதே போன்று ஜூன் 28 அன்று தர்ம பிரபு, ஹவுஸ் ஓனர், மற்றும் சில படங்களை திரையிட அறிவிப்பு வெளியானது.

கடத்திச் செல்லப்பட்ட மனைவியை கேட்கும் திறன் குறைவாக உள்ள நாயகன் மீட்டு வருவதே சிந்துபாத் படத்தின் திரைக்கதை.

மனைவியை மீட்க நாயகன் நடத்தும் போராட்டத்தை காட்டிலும் சிந்துபாத் படத்தை வெளியிடுவதில் கடுமையான நிதி நெருக்கடியை அப்படம் சந்தித்து வருகிறது என்கின்றனர் திரைத் துறையினர்.

சிந்துபாத் படத்தை தயாரித்துள்ள மாலிக் கார்ப்பேரேஷன், ராஜ ராஜன் இருவரும் தங்களது முந்தைய படங்களை வெளியிட்ட வகையில் விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய பாக்கி, படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ள கிளாப் போர்டு நிறுவனம் அடங்க மறு படத்தை ரிலீஸ் செய்த வகையில் முடிக்கப்படாமல் இருக்கும் கணக்குப்படி திருப்பித் தர வேண்டிய பாக்கி தொகை என பல கோடி ரூபாய் பாக்கியை திருப்பி தர வேன்டும்.

படத்தின் தமிழ் நாடு உரிமையை 10 கோடி ரூபாய்க்கு வாங்குவற்கு பைனான்சியரிடம் வாங்கியுள்ள 5 கோடி ரூபாய் இதுவரை திருப்பி தரவில்லை.

சிந்துபாத் படத்தின் பட்ஜெட், அதனுடைய வியாபாரத்தை போன்று இரு மடங்கு அளவு திருப்பித்தர வேண்டிய கடன்கள் இருப்பதால் இம்மாத இறுதியில் தயாரிப்பாளர் கூறுவது போல, ஜூன் 28 அன்று படம் வெளிவராது என்கின்றனர் திரைத்துறை விநியோகஸ்தர்கள்.